ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!

கொரோனா காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

கொரோனா காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புதுடெல்லி அரசும் இலவசக் கல்வி வழங்குகிறது.

ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை யாகச் செலுத்தப்படும் என்றும், இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கெனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் தத்தெடுத்தால், குழந்தைகள் மனரீதியில் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாநிலத் துறைகளும் சிறார் நீதிச் சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்தவர்களைப் பராமரிக்க ‘உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ (kinship care) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகச் செயல்படுத்த வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்புப் பிரிவு சார்பில் இந்த நெருக்கடியான காலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும், அவர்களைப் பராமரிக்கவும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.