கள்ளகுறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவர்களின் சான்றிதழ்களை தீயிட்டு எரித்த நபரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, கலவரத்தின்போது சக்தி பள்ளியில் அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்று ஆவணங்களை தீ வைத்து எரித்தவரை அடையாளம் கண்டனர்.
அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா வி.மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மகன் லட்சாதிபதி (வயது 34) என்பது தெரியவந்தது. சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அவர் தான் மாணவர்களின் சான்றிதழ்களை தீயிட்டு எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படையினரால் திருப்பூரில் வைத்து லட்சாதிபதி கைது செய்யப்பட்டார்.
– இரா.நம்பிராஜன்








