சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை. பீஃப் பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் முன் வரவில்லை என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 14ந்தேதி வரை மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து மூன்று நாட்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.உணவு திருவிழாவின் இறுதி நாள் பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.
”சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022” என்ற பெயரில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் உணவுத் திருவிழாவில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 10 மணியளவில் உணவு திருவிழாவை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நாசர், மெய்ய நாதன், மதிவேந்தன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
உணவு வீணாவதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், உடல் ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளன.
இவ்வாறு அரசின் சார்பில் பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்ற ஒரு புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. சிறிய பிரியாணி கடைகள் முதல் பிரபல பிரியாணிக் கடைகள் வரை உணவுத் திருவிழாவில் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத் திருவிழாவில் 180 அரங்குகள் அமைக்கப்பட்டும்.இதில் ஒரு அரங்கில் கூட பீப் பிரியாணி உணவு இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழாவின் ஏற்பாடுகளை கண்காணித்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பீப் பிரியாணி உணவு விற்பனைக்கு அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை என விளக்கம் அளித்தனர். சமீபத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டபோது அதில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
– நிஷாந்த்







