சந்திரமுகி 2ல் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் சந்திரமுகி. மக்கள் பெரிதும் கொண்டாடிய, இப்படத்தை பி.வாசு இயக்கினார். மேலும் ரஜினியின் திரை பயணத்திலும் சந்திரமுகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதில் ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, பிரபு, வடிவேலு, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குறிப்பாக இப்படத்தில் ரஜினி – வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினி இப்படத்தில் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இப்படத்தையும் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் வடிவேலும் இணைந்துள்ளார். நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நடிப்பது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிபார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் ,சந்திரமுகி பாகம் 1ல் வடிவேலு நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி பாகம் 2ல் வடிவேலுவின் கதாப்பாத்திரம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்கிறாரா? இல்லை குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு தற்போது வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த விவரத்தை வெளியிட்டது. அதில் இப்படத்திலும் சந்திரமுகி படத்தில் நடித்தது போலவே முருகேசன் என்ற அதே கேரக்டரில் வடிவேலு மீண்டும் நடிப்பதாக கூறுகிறார்கள். அதோடு முதல் பாகத்தை மிஞ்சும் அளவுக்கு அதிரடியான காமெடி காட்சிகளில் நடிக்கிறார். குறிப்பாக, லாரன்ஸ் – வடிவேலு இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் சந்திரமுகி படத்தைப் போலவே இந்த படத்திலும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும் என்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜூலை 15ம் தேதி மைசூரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்பட 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சந்திரமுகி 1 கதாபத்திரத்திரத்திலேயே வடிவேலு நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.







