பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில், பத்திரிகையாளர்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓய்வூதிய உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அப்பதிவில், “பிகார் அரசில் பதிவு செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின், ஓய்வு பெற்ற, தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாத ஓய்வூதியத்தை ரூ.6,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்றுவரும் பத்திரிகையாளர் இறக்கும் பட்சத்தில், அவரின் மனைவி அல்லது அவரைச் சார்ந்திருந்த வாரிசுக்கு வாழ்நாள் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் இந்த வாழ்நாள் ஓய்வூதியம் ரூ.3,000-ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ‘பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி, சமூக மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். இவர்கள் தங்களின் கடமைகளை பாரபட்சமின்றி செய்யவும், ஓய்வுக்குப் பிறகும் கண்ணியத்துடன் வாழவும் அரசு ஆரம்பம் முதல் அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளித்து வருகிறது’. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.