நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி. நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை வழங்குவதில் முன்னணியில் இருந்தார். இவர் டி.ஆர்.டி.ஓ., மற்றும் ராணுவம் தொடர்பான, முக்கிய தகவல்களை சேகரித்து, அவற்றை வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக டெல்லி காவல்துறை இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர் மே 9-ம் தேதி விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு எதிரான சோதனைகள் கிடைத்த ஆதாரங்களை சேகரித்த பிறகு, ரகுவன்ஷி நேற்று இரவு சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். மேலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ரகுவன்ஷியின் கூட்டாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து, சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
டி.ஆர்.டி.ஓ., திட்டங்களின் முன்னேற்றம் குறித்த முக்கிய தகவல்கள், ராணுவத்தின் எதிர்கால கொள்முதல் திட்டங்களின் விவரங்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள், மற்றும் நம் நட்பு நாடுகளுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து விவேக் அனுப்பியுள்ளார்.” என்று கூறினார்.
இந்த தகவல்கள் வெளியே கொண்டு வரப்பட்டால், நட்பு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை கெடுத்துவிடும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







