“மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி

மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அ வர் கூறியதாவது, “தமிழ்நாடு உரிமைகள் விட்டு போய்விடக்கூடாது. தமிழ்நாடு உரிமைகளை நீதிமன்றத்தின் முலம் பெறலாம். தண்ணீர் பெறுவது, மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்பது ஆகியவை மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசின் அனுமதியில்லாமலோ பிரதமரின் அனுமதி இல்லாமலோ மேகதாது அணை கட்ட முடியாது. மேகதாது அணைக்கு அனுமதி வரும் போது கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என பிரதமரிடம் அன்புமணி சொல்ல வேண்டும். இதை பிரதமரிடம் சொல்வாரா?

எம்.ஜி.ஆர். அப்பொதைய கர்நாடக முதல்வரை சந்தித்து பேசிய போது தண்ணீர் கேட்ட வரலாறு உள்ளது. நாம் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது. கர்நாடகவில் தமிழர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கன்னடர்கள் உள்ளனர். காவிரி என்பது தமிழ்நாடு வாழ்வாதார பிரச்சனை. காவிரி நீர் நம்முடைய ஜீவநதி. காவிரியில் நமக்கு நியாயப்படி தண்ணீர் கிடைக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்வதை அரசியலாக்குவது நியாயமில்லாதது.

முதலமைச்சர் போகிறாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை. அதற்கு முன் போக கூடாது என்று பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. 2 மாநில முதல்வர்கள் சந்திப்பதில் என்ன தவறு என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டு உள்ளது. நியாயப்படி நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தான் கேட்கிறோம். தமிழ்நாடு உரிமைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.

மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயன்றாலும் மத்திய அரசு அனுமதியில்லாமல் கட்ட முடியாது. மேகதாது அணை கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என்பதை மோடியிடம் அன்புமணி கூற வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.