முக்கியச் செய்திகள் செய்திகள்

ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலகப் பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரி ஜிப்மர் “அலுவல் மொழி அமலாக்கம்” பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்தி பிரிவால், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளதாம். இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது “இந்தி மட்டும்” என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது?

என்னைப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு “இந்தி செல்” என்ற பெயரே சரியில்லை. அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் “OLI Cell” என்றுதான் இருந்திருக்க வேண்டும். அக் குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கருதுகிறேன். அந்த “செல்” சட்டத்தின் படியே செயல்பட வேண்டும். “இந்தி மட்டும்” என்ற உறுதி மொழி, சட்ட நியதிகளை கடந்தது ஆகும்.

உண்மையில், ஒன்றிய அரசின் துறை, நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில்தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். ஆகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/OL imple/ 2022 திரும்பப் பெற வேண்டும். உடனடியாக இத்தகைய நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் மரு. ராகேஷ் அகர்வால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்: ஜிப்மரில் இந்தி அமலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சிவா தலைமையில், திமுகவினர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனை வாயிலில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதில்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழர்களை சீண்டாதீர் – எம்எல்ஏ வேல்முருகன்: ஜிப்மரில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தீவிரமாகவும், அப்பட்டமாகவும் இந்தியை திணிப்பதாக அமைந்துள்ளன. ஜிப்மர் இயக்குனரின் இத்தகையை சுற்றறிக்கை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த அரசியலமைப்பு சட்டவிதிகளை சற்றும் மதிக்காத ஒன்றிய அரசும், ஜிப்மர் இயக்குனரும், தமிழர்கள் மீது எப்படியாவது இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்டு தமிழினம் என்றைக்கும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.

எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்ட வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படும்: ஆளுநர் தமிழிசை: ஜிப்மரில் இந்தியைத் திணிப்பதாக கருத்து நிலவி வருகின்றது. நிர்வாக ரீதியான இந்த சுற்றறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஜிப்மரில் மொழி திணிப்பு அல்ல அது திணிப்பு போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தி சர்ச்சை தொடர்பாக போராட்டம் தேவையற்றது. மருத்துவமனைக்கு இடையூறு செய்ய வேண்டாம். தமிழ் மொழி முன்னிலைப்படுத்தபடுத்தப்படும் என்ற சுற்றறிக்கை உள்ளது. இதை நான் உறுதி செய்துள்ளேன். ஆகவே இதை சர்ச்சை செய்ய வேண்டாம் என தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியரிடம் காவல்துறையினர் விசாரனை!

Halley Karthik

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!

Vandhana

நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்

G SaravanaKumar