ஆர்.ஏ.புரம் மக்கள் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் உறுதியளித்தார்.
சென்னை பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு வீடுகள் இடிப்பு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “2008ல் இருந்து இந்த பிரச்னை இருக்கிறது, உச்சநீதிமன்ற தீர்ப்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 625 பேரில் 366 பேருக்கு 2015ம் ஆண்டிலேயே மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 259 பேரில் 141 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. எஞ்சியவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அவகாசமும் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை மனிதாபிமானமுடன் கையாள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, மக்கள் கேட்கும் இடத்திலேயே மாற்று வீடுகள் வழங்கப்படும், உயிரிழந்த கண்ணையன் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம்மந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் உரிய விதிமுறைகள் வகுக்கப்படும்” என்றார்.
இந்த உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
Advertisement: