முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.
மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னத்துடன் கூடிய 75 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ’மக்களால் புறக்கணிப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி’ – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜிஆர் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







