நாகர்கோவில் ஆயுதப்படை பெண் தலைமை காவலர், மற்றும் பெண் உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் தலைமை காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில், உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் வள்ளிச்செல்வி (27) என்ற பயிற்சி உதவி ஆய்வாளரிடம் அங்கு தலைமை காவலராக பணியாற்றி வரும் சொர்ணவேணி (39) விடுப்பு கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்துள்ளது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் இருவர் அளித்த புகாரினையும் நேசமணி நகர் போலீசார் பெற்றுக்கொண்ட நிலையில், புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உயர் அதிகாரிக்கு மரியாதை செலுத்தவில்லை எனக் கூறி தலைமை காவலர் சொர்ணவேணி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தற்சார்பு விடுப்பு காலையில் கேட்டும் இரவு வரை அலைக்கழித்து தன்னை சாதிப்பெயரை கூறி விடுப்பு தரமுடியாது என பயிற்சி எஸ். ஐ., கூறியதாக தலைமை காவலர் குற்றச்சாட்டியிருந்தார்.
ஆயுதபடை பிரிவில் பணிபுரியும், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவருக்கும் இடையே விடுமுறை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.







