ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை அடித்தே கொலை செய்து அதனை மறைக்கிறது. இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் சட்ட முயற்சிகளே ஜெய்பீம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக ராஜாகண்ணு வழக்கில் நீதி கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டவரும், தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன், நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒரு உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய அதன் இயக்குநர் .ஞானவேல் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
திரைக்கலைஞரான சூர்யா முக்கியமான பிரச்சனைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவதற்கு பாராட்டை தெரிவிப்பதாகக் கூறியுள்ள பாலகிருஷ்ணன், ஜெய்பீம் படத்தின் வெற்றி மார்க்சிஸ்ட் இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதி பெருமையடைகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒரு ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.