தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார்.…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.

இதேபோல போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோர் முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.