மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெய்தது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ததால் பல இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த நிலையில் நிவாரணப் பணியில் அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.
தற்காலிக முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாது, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தண்ணீர் தேங்கிய இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தேங்கிய மழைநீர் மற்றும் குப்பைகள் உடனடியாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.








