இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும்,…

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், அவர்கள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 3வது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்நிலையில், காஸாவில் 400 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்புக்கு இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.