பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
சில மாதங்களுக்கு முன்னர், இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, மே 9ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை அந்நாட்டின் ரேஞ்சர்ஸ் எனப்படும் அதிரடி படையினர் நீதிமன்றத்தின் ஜன்னல்களை உடைத்து கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இம்ரான் கானை கைது செய்வதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டட்தை கண்டித்து இஸ்லாமாபாத் உள்பட அந்நாட்டின் பல இடங்களில் பிடிஐ கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மீண்டும் வெற்றியை தக்க வைப்பாரா இயக்குனர் வெங்கட் பிரபு? – ‘கஸ்டடி’ விமர்சனம்
பின்னர் இம்ரான்கானின் கைதை எதிர்த்து பிடிஐ கட்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறியதுடன் அவரை உடனடியாக விடுவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 2 வார காலத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை வேறு எந்த வழக்கிலும் இரண்டு வாரத்திற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.








