திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் எப்படி இருக்கிறது? இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இப்படம் வெற்றியை ஈட்டித் தருமா? விரிவாக பார்க்கலாம்….
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் கதை 90களில் நடக்கிறது. கான்ஸ்டபிளாக இருக்கும் நாக சைத்தன்யா ஆம்புலன்ஸ் செல்வதற்காக முதல்வரின் வண்டியை நிறுத்துகிறார். அவரின் நற்செயலை முதல்வரும் பாராட்ட இதனால் அவர் மிகவும் பிரபலமடைகிறார். அதே நேரத்தில் முதல்வர் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராசுவை ( அரவிந்த் சாமி ) சிபிஐ அதிகாரி ஒருவர் கையும் களவுமாக பிடிக்கிறார்.
ராசு உண்மையை சொன்னால் ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் அவரை எப்படியாவது கொலை செய்ய காவல்துறையை ஏவி முயற்சி செய்கிறார். அதிகார வர்க்கம் ராசுவை கொலை செய்வதை தடுத்து நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்க முயற்சி செய்கிறார் கான்ஸ்டபிள் நாக சைதன்யா.
ஒருபுறம் காதல் பிரச்னை மற்றொரு புறம் அதிகார வர்க்கம் கொலை செய்ய முயற்சிக்கும் ராசுவை காப்பாற்ற வேண்டும். இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாக சைதன்யா என்ன செய்தார் என்பது தான் கஸ்டடி படத்தின் கதை.
போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ள நாக சைதன்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளில் மிளிரிய அளவு மற்ற காட்சிகளில் மிளிரவில்லை. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஓகே என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிய அளவில் அவரது நடிப்பு ஈர்க்கவில்லை.
கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி இடையேயான காதல் காட்சிகள் இதற்கு முன்பு பார்த்த அதே அரைத்த மாவு தான். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. படத்தின் தொடக்கத்தில் வரும் 30 நிமிடங்கள் கதை ஒன்றுமே புரியவில்லை.
இந்த படத்தின் பெரும் பலம் என்றால் அது அரவிந்த் சாமியும் சரத்குமாரும் தான். அரவிந்த் தன்னுடைய அசால்ட்டான பாடி லாங்குவேஜால் அதகளம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு தீனி போடும் அளவிற்கு காட்சிகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வில்லனாகவும், காவல்துறை அதிகாரியாகவும் தனது வில்லத்தனத்தை காண்பித்துள்ளார் சரத்குமார். அரவிந்த்சாமி மற்றும் சரத்குமார் வரும் காட்சிகள் மட்டுமே நம்மை சற்று எங்கேஜிங்காக வைத்துள்ளது. முதலமைச்சராக நடித்துள்ள பிரியாமணி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு வில்லத்தனத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே அதில் நிச்சயம் பிரேம்ஜி இருப்பார். அதுபோலவே இந்த படத்திலும் நகைச்சுவை என்ற பெயரில் பிரேம்ஜி நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அது ஒன்றுமே வேலைக்காகவில்லை.
வித்தியாசமான கதையோ அல்லது சற்று சிரிக்க வைக்கும் நகைச்சுவையோ கண்டிப்பாக வெங்கட் பிரபு திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கி இருப்பதாக தோன்றுகிறது. நடிகர்கள் முதல் படத்தில் வரும் இடங்கள் என அனைத்தும் தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சண்டைக் காட்சிகளில் வரும் பில்டப்புகள் அனைத்தும் தெலுங்கு ரசிகர்களையே அதிகம் கவரும். தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப படத்தில் பல மசாலா விஷயங்கள் இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
– தினேஷ் உதய்








