அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து, உயிருக்குப் போராடிய பெயிண்டர், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி அருகே, வேம்பு அவென்யூ பகுதியில், லோட்டஸ் எனும் நான்கு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு கடந்த சில தினங்களாக வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. சந்திரன், ஹரிதாஸ் ஆகிய இருவரையும், கோவையைச் சேர்ந்த முரளி அழைத்து வந்து, மூவரும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, தொங்கு சாரக் கயிறு அறுந்ததில் சந்திரன் கீழே விழுந்தார். இதில், சந்திரனின் தலை அங்குள்ள மதில் சுவரில் மோதியது. இதனால், தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு, ரத்தம் வெளியேறியது. உடனடியாக, அவருடன் வேலை செய்த இருவரும், சந்திரனை தூக்கி நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது, அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் சந்திரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வேடிக்கை பார்த்தபடியே நின்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் – இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய சந்திரன், நாற்காலியில் அமர்ந்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







