தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸை தடாலடியாக கைது செய்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா?
ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட மாரிதாஸை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




