“தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனைகிறதா தவெக அரசு?” – டிடிவி தினகரன்

அரியலூரில் போதை ஆசாமிகளால் அடித்துக் கொல்லப்பட்ட ஊர்காவல் படை வீரரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அரியலூர் அருகே ரோந்து பணியின் போது போதைக் கும்பலால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான ஊர்க்காவலர் படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கழுத்தை நெறித்து ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட பெண் பலி, தூத்துக்குடி அருகே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விசிக பிரமுகர் கொலை என அடுத்தடுத்து வெளியாகும் கொலைச் செய்திகள் தமிழக மக்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே போதைக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கான அசாதாரண நிலையை இந்த பொம்மலாட்ட தவெக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.

தவெக ஆட்சியில் அன்றாடம் ஒலிக்கும் மரண ஓலங்களால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளிவரவே பயந்து ஒடுங்கிவரும் சூழலில், அவர்களின் கூக்குரல் அண்ணன், தம்பி, மாமன் என்று Reel’s காக ரீல் விடும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் காதுகளுக்கு மட்டும் கேட்காமல் இருப்பதன் மூலம் தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியா அல்லது அரக்கர்களின் ஆட்சியா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்தவுடன் பட்டிதொட்டி எங்கும் போதை கலாச்சாரம் பரவி உள்ளதாக வாய்கிழிய பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அதனை வேர் வரை சென்று கிள்ளி எறியாமல், குற்றம் நடந்தபின்பு நீதி வழங்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை கூட்டுவது மூலம் தனக்கு கீழ் இயங்கும் காவல்துறை செயலற்ற நிலையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா?

எனவே, பட்டிதொட்டி எங்கும் புரையோடிப் போயிருக்கும் போதை பொருட்களின் தாராள நடமாட்டத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, போதைக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த ஊர்க்காவலர் படை வீரரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவியை உடனடியாக வழங்கிடுவதோடு, சட்டம் ஒழுங்கு என்பது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் வழங்கப்படும் அடிப்படை உத்தரவாதம் என்பதை இனியாவது உணர்ந்து அதனை சீரமைக்க கூடுதல் கவனத்தை செலுத்திட வேண்டும் என முதலமைச்சர் விஜயை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.