சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (01-11-26) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (“முரசு”) (Cyclonic Storm) வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02.11.2026) அதிகாலை 02.30 மணிஅளவில் தீவிர புயலாக (severe cyclonic storm) வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று நள்ளிரவு 23:30 மணிமுதல் நாளை (03.11.2026) அதிகாலை 04:00 மணிக்குள் கரையைக்கடக்கக்கூடும். சுமார் 3.1 கிமீ உயரத்தில் தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




