சிறைச்சாலை பாதுகாப்பு : ஜே.கே.திரிபாதி தலைமையில் குழு அமைப்பு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்ட சிறையிலிருந்து அண்மையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களுக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு, நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும்.
இந்த உயர்மட்டக் குழுவிற்கு, தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஜே. கே. திரிபாதி, ஐ.பி.எஸ். (ஓய்வு) தலைவராக இருப்பார்.

மேலும், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் / சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் கே. சங்கர், ஐ.பி.எஸ். மற்றும் சிறைத்துறை முன்னாள் துணைத் தலைவர் (DIG) எஸ். ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இந்த உயர்மட்டக் குழு, தமிழ்நாட்டில் அண்மையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளும். மேலும், தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs), தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் பணியாளர் நியமனம் ஆகியவற்றை ஆய்வு செய்து, சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளை வழங்கும்.

நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை இந்தக் குழு அரசுக்கு வழங்கும். இந்தக் குழு தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும். சிறைச்சாலை பாதுகாப்பை போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தவும், பணியில் ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டால் அதற்குரிய பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் மீது சுமத்தவும் (பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்) முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.