கிறிஸ்தவர்கள் வழிபடும் கல்லறை திருநாளில் ஆசிரியர் தகுதி தேர்வா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.