தமிழ்நாடு அரசு பணிக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்ட பின்னரும், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 நாட்களாகத் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வீடுகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போராடி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசே எங்களைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்திற்குத் தூண்டி வருகிறது. எங்களை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல” எனத் தெரிவித்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் முக்கியக் கோரிக்கை, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான். “கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நாங்கள் எந்தப் பணியில் இருந்தோமோ, அதே பணியில் தொடர வேண்டும். தனியார் நிறுவனமான ‘ராம்கி’க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது.
மக்களுக்கான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவது ஏன்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தனியார்மயமாக்கலில் ஊதியம் குறையும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். “நாங்கள் போராடிப் பெற்ற ஊதியத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, அவர்கள் அதை குறைப்பார்கள் என நாங்கள் எப்படி நம்புவது?” எனக் கேட்டுள்ளனர். பணி நிரந்தரம் குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவில்லை என்ற அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தினர். “எங்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர் முதலமைச்சர். இப்போது நாங்கள் போராடுகிறோம், ஆனால் அவர் வரவில்லை. குறைந்தபட்சம் துணை முதலமைச்சராவது வந்திருக்க வேண்டும், அவரும் வரவில்லை. அமைச்சர் சேகர் பாபு எங்கள் துறை அமைச்சர் இல்லை, கே.என்.நேரு எங்கே போனார் எனத் தெரியவில்லை” என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், கவுன்சிலர்களை வைத்து அரசு தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போராட்டத்தின்போது, “எங்கள் சங்கம் இல்லை என்றால் எங்களை இவ்வளவு நாட்களுக்கு போலீஸ் தூக்கி எறிந்திருப்பார்கள். சங்கத்தின் பலத்தால்தான் நாங்கள் நிற்கிறோம்” என்று தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்டனர்.
“உயிரே போனாலும் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம். துப்பாக்கியால் சுடுவார்களா? ஜெயிலில் அடைப்பார்களா? மிரட்டுவது உங்கள் வேலை இல்லை” எனத் தூய்மைப் பணியாளர்கள் உறுதியாகக் கூறினர். அதே சமயம், தாங்கள் இப்போதும் பணிக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி இருந்த பணி நிலை தொடர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.







