வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வி பி துரைசாமி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளும், சாதனைகளும் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அம்பேத்கரின் வழியில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
திமுகவினர் சமூகநீதியை குத்தகைக்கு எடுத்தது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார். வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவோம் என 20 ஆண்டுகளாக திமுகவினர் தெரிவித்து வருவதாக கூறிய அவர், பிரதமர் மோடியால் மட்டுமே கூவத்தை தூய்மைப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக அமைதியாக இருக்கிறார். மதி வேந்தன், கயல்விழி செல்வராஜ், சிவி கணேசன் உள்ளிட்ட திமுகவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள், அமைச்சரவையில் கடைசியில் உள்ளனர். ஏன் அவர்களால் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பெரிய துறைகளை கையாள முடியாதா. இதுதான் போலி சமூக நீதி என விமர்சித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









