பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கூட கைது செய்து அடைத்து வைப்பது கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. மாதம் ரூ.5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக ரூ.576 என்ற அளவில் 13 ஆண்டுகளில் ரூ.7500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணி நிலைப்புக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயன் இல்லாததால் தான் அவர்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு வழங்குவதற்கு பதிலாக ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்து அடைத்து வைக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி (எண் 181) அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய திமுக அரசு முன்வர வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







