முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

காதலை நிராகரிப்பது குற்றமா?


ஜெயகார்த்தி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததும், அந்த வேதனையில் மாணவியின் தந்தை மரணமடைந்த செய்தி தான் தமிழ்நாட்டின் தற்போதைய அதிர்ச்சி கலந்த துயரச் செய்தி… இந்த விவகாரத்தில் காதலை நிராகரிப்பது குற்றமா? அன்பின் அடிப்படையில் உருவாகும் காதலில் எங்கே வெறுப்பு உண்டாகிறது? இதற்கு தீர்வு என்ன என்பது பற்றி இனி பார்ப்போம்…

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த, கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்தியாவை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்தியாவைச் சந்தித்து பேசிய சதீஷ் வாக்குவாதம் முற்றி சத்தியாவை ரயில் வரும் நேரத்தில் தள்ளிவிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ரயில் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார். அந்த வேதனையில் சத்தியாவின் தந்தையும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவியை படுகொலை செய்த இளைஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இளைஞர் மற்றும் கல்லூரி மாணவி இருவரின் குடும்பமும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. காதலிக்க மறுத்த காரணத்தால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி சம்பவம் போலவே இதுவும் நடந்திருப்பதால், தமிழ்நாட்டு பெற்றோர்களிடையே அதிர்வலையை உருவாக்கி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். பலமுறை மாணவியிடம் பேச முயன்றும் நிராகரித்துவிட்டதாகவும், உறவினர் ஒருவருடன் மாணவிக்கு நிச்சயம் செய்ததால் அவரை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தாக கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, கைது செய்யப்பட்ட இளைஞர் கொலை செய்யும் எண்ணத்தில் மாணவியை பின்தொடர்ந்து சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டது வெட்டவெளிச்சமாகிறது.

பிடிக்கலையா… விட்டுடுங்க…

இந்த விவகாரம் தொடர்பாகவும், காதல் பற்றிய புரிதல் குறித்தும், இதுபோன்ற சம்பவங்களை எப்படித் தடுக்கலாம் என்பது பற்றியும் கல்லூரி மாணவர் சுந்தரராஜனிடம் கேட்டபோது, “முதலாமாண்டு படிக்கும் போது, பெயர் பிடித்து இருந்ததாலேயே ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்த உடன் தமது எண்ணத்தை கைவிட்டு விட்டதாகவும் கூறினார். அத்துடன், அந்த பெண்ணிடமே நேரில் சென்று தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டதாகவும்” தெரிவித்தார்.

புரியாத லாஜிக்

சென்னையில் தங்கி பணிக்குச் செல்லும் இளம்பெண் காயத்ரியிடம் கேட்டபோது, மனதளவில் பிடித்துத் தானே இருவரும் காதலிக்கிறார்கள். அன்புக்குரியவர்களுக்கு சிறு தீங்கு கூட நேரக்கூடாது என்று எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி கொலை செய்யும் எண்ணம் வருகிறது. காதலிக்கும் போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர், எப்படி நிராகரிக்கப்படும் போது மட்டும் வேறு ஒரு மனிதாக மாறுகிறார் என்று தான் தெரியவில்லை. இது தான் புரியாத லாஜிக்காக இருக்கிறதே என்று குறிப்பிட்டார். 

காதலில் சினிமாவின் தாக்கம்

சென்னையில் பணியாற்றும் மற்றொரு இளைஞர் தர்மாவிடம் கேட்ட போது, இளைஞர்களின் தற்போதைய காதலில் மூவி இன்புளுயன்ஸ் அதிகம் என்றார். கல்லூரி செல்லும் கதாநாயகனுக்கு ஒரு பைக்கும், காதலியும் அவசியம் என்று சினிமாவில் காட்டப்படுவது போலவே, கதாநாயக பிம்பத்தில் சிக்கிய இளைஞர்களும் மாட்டிக்கொள்கிறார்கள் என்றார். பைக் இல்லாமல் முதலாமாண்டு சைக்கிளில் சென்ற தம்மை உடன் படிக்கும் நண்பர்களே கேலியாக பார்த்தாகவும், தேவைகளை குளோரிஃபை செய்வது கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். உடன் படிக்கும் கல்லூரி மாணவிகளிடம் பேசத் தெரியாத இளைஞர்களை, சக நண்பர்களே கேலி கிண்டல் செய்வதும் கல்லூரிகளில் அதிகம் நடப்பதாகவும் கூறுகிறார்.

காதலுக்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும்

காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜனிடம் கேட்டபோது, காதலை காதலுக்கு முன்னும் பின்னும் என்று பிரித்து பார்த்தால் உண்மையான அன்பு தெரிய வரும் என்றார். அதாவது காதலிக்கும் போது இருக்கும் அன்பானது திருமணத்திற்கு பிறகு, உரிமையாக கடமையாக மாறிவிடுகிறது என்றும் அங்கேயே ஆணாதிக்கம் தொடங்கிவிடுகிறது என்றும் குறிப்பிட்டார். திருமணமான பின்பும், அதற்கு முன்பு இருந்தது போலவே, அதே அன்போடு, புரிந்துணர்வோடு, வாழ்ந்தால் வாழ்க்கை இன்பமாகிவிடும் என்றார்.

பெற்றோரின் புரிந்துணர்வு அவசியம்

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி மகேஸ்வரி கூறும் போது, கல்லூரி மாணவர்கள் இடையே காதல் பற்றி புரிதல் இல்லாததால் தான் இதுபோன்ற கொலைகள் நடைபெறுகின்றன. காதல் என்பது பாலின ஈர்ப்பு காரணமாக வருவது என்பதை பெண்கள் புரிந்து கொள்ளும்போதுதான் இதுமாதிரியான கொலைகள் நடக்கிறது. ஒரு பெண் தன்னுடைய காதலை நிராகரிக்கும்போது ஏற்படும் கொலைகளை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளுடன் ( ஆண், பெண் ) அன்புடனும், அரவணைப்புடனும் நடத்திட முயற்சிக்க வேண்டும். அதேபோன்று, ஒரு குடும்பத்தில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளபோது அந்த குழந்தைகளிடம் பாகுபாடு இல்லாமல் பெற்றோர் நடந்து கொள்ளும்போதுதான் பெண் குழந்தைகள் மீதான மரியாதையும், அன்பும் ஆண் குழந்தைகளுக்கு தெரியவரும். இதில் கவனம் செலுத்தலாம் என்றார்.

குழந்தை வளர்ப்பில் கவனம்

பெற்று, வளர்த்து, கல்லூரிக்கு அனுப்பி படிக்கவைக்கும் பிள்ளைகளுக்கு இதுபோன்ற நேருவது தங்கள் வாழ்க்கையையே சூனியமாக்கிவிடும் என்று பெற்றோர் குமுறுகிறார்கள். இது இருமுனைக் கத்தி போல என்றும் இந்த கொலை செய்த இளைஞரின் குடும்பம் மட்டுமின்றி, பெண்ணின் குடும்பமும்  நிலைகுலைந்து போய்விட்டதாக பழவந்தாங்கலைச் சேர்நத் செல்வசுந்தரி என்பவர் தெரிவித்தார். பெண்குழந்தைகள், ஆண்குழந்தைகள் என்று பாரபட்சமின்றி, குழந்தைகளை பொறுப்புடன் கவனித்து வளர்க்க வேண்டும் என்றும், அவர்களுடைய செயல்பாட்டைக் கண்காணிப்பதோடு, குழந்தைகளுடன் பெற்றோர் மனம் விட்டு பேச வேண்டும் என்றம் அதற்கான சூழலை பெற்றோரே உருவாக்கித்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கல்லூரிகளின் பங்கு

இதுபோன்ற காதல் சிக்கலுக்கு கல்லூரிகள் எப்படி தீர்வு காணலாம் என்று கேட்டபோது, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இணை பேராசிரியர் ஆ. அருணாச்சலம் கூறியதாவது, “கல்லூரிகளிலேயே அதிகம் காதல் விவகாரம் தலை தூக்குவதால், மாணவர்கள் – ஆசிரியர்கள் உறவு மேம்பாடு, மாணவர்களிடையே நல்லுறவு உருவாக்குவதல், பெற்றோர் – ஆசிரியர் குழுவை உருவாக்கி புரிந்துணர்வை ஏற்படுத்ததுல் அவசியம் என்றும் இந்த மூன்று நடைமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் குறையும் என்றார். கல்லூரி மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய வழிகாட்டுக் குழுவையும், மாணவர்கள் கண்காணிப்பு குழுவிலும் நேர்மையானவர்களையும், மாணவர்களை நன்கு புரிந்தவர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார்.

தம்முடைய கல்லூரியிலேயே இதுபோன்ற பிரச்னை எழுந்தபோது, இருதரப்பையும், பெற்றோரையும் அழைத்து பேசி சரி செய்ததாக பேராசிரியர் அருணாச்சலம் கூறினார். இதுபோன்ற சிக்கலுக்குள்ளான மாணவர்களை கண்டறிந்து, அவர்களுடைய தனித்திறன் வெளிக்காட்டக் கூடிய என்.சி.சி, என்.எஸ்.எஸ், விளையாட்டு போட்டி, இலக்கிய வகுப்புகளில் சேர அறிவுறுத்துவதாகக் கூறினார். அத்துடன் கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கலாம் என்றும், நல்லொழுக்க பயிற்சிகளை அளிக்கலாம் என்றும் கூறுகிறார். மாணவர்களைப் பார்த்தாலே, அவர்களுடைய செயல்பாட்டைக் கண்காணித்தாலே அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம் என்றும் உண்மையான ஆசிரியர் அவர்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து சரி செய்துவிடலாம். படிப்பில் அழுத்தம், பெற்றோர் வேலைக்கு செல்வதால் பேசுவதற்கு ஆளில்லா சூழல் போன்ற காரணத்தால் மாணவர்களிடையே அழுத்தம் அதிகரிப்பதாகவும் இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க பெற்றோரே, ஆண் பெண் பாலின சமத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு தெளிவாகக் கூறி வளர்ப்பது நல்ல பலனைத் தரும் என்கிறார் இணை பேராசிரியர் அருணாச்சலம்.

மனநல மருத்துவர் கார்த்திக் துரைசாமி

பருவ வயதில் இருக்கும் இளைஞர்கள் உணர்ச்சி வசத்தில் எடுக்கும் அதீத முடிவு காரணமாக, இரண்டு குடும்பங்கள் நிர்கதியான நிலைக்கு போய்விடுகிறது. அத்துடன் காதல் என்பதே அன்பின் அடிப்படையில் தோன்றக்கூடிய நிலையில், அதில் ஏன்  வெறுப்புணர்ச்சி தலை தூக்குகிறது? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்வது என்பது என்பது பற்றி தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள போதி மன மருத்துவமனையின் மனநல மருத்துவர்  கார்த்திக் துரைசாமியிடம் இடம் கருத்து கேட்டோம். சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்றதை மனநோய் என்று கூறமுடியாது. குணாதிசயம் சார்ந்தது. எமோஷனலாக, உணர்ச்சி வசப்பட்டு செய்த சம்பவம் தான் நடந்துள்ளது. எல்லாம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நினைப்பு எல்லோருக்கும் பொதுவானது தான் என்றாலும், இதில் ஆழமாக போகும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார். இப்படிப்பட்டவர்கள் கருப்பு வெள்ளை எண்ணம் கொண்டவர்கள் என்றும் இந்த மனநிலை கொண்டவர்கள் எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். அதன் காரணமாகவே  தங்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்தாலும் வெறுப்பைக் காட்டிவிடுகின்றனர். இதேபோல் போதைக்கு அடிமையானவர்கள் கூட இப்படிப்பட்ட செயலை செய்துவிடுகிறார்கள் என்று மனநல மருத்துவர் கார்த்திக் துரைசாமி கூறினார்.

இப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவத் தீர்வு பற்றி கேட்டதற்கு,  அவர்கள் மனதில் இருப்பதை கேட்பதற்கு ஆளில்லாததும்,  அவர்கள் வளர்ந்த சூழலும் கூட இதுபோன்ற தவறான செயலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்களுடைய பிரச்னையை கண்டறிந்து, அவர்களுடைய கோபத்தை குறைப்பதற்காக முறையான கவுன்சிலிங் கொடுக்கப்பதே அதற்கு தீர்வாக இருக்கும் என்றும் மன நல மருத்துவர் கார்த்திக் துரைசாமி தெரிவித்தார்.

ஒருவர் மீது நாம் செலுத்தும் அன்பும், நேசமும் காதல் தான். அன்பைப் பொழிந்தவரும், பொழிபவரும் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே உண்மையான காதல். எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தத் தெரியாதவர்கள் காதலிக்கத் தகுதியற்றவர்கள் தானே…

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரையரங்குகளில் வெளியானது ‘வலிமை’

Halley Karthik

ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்

Halley Karthik

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

Hamsa