இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி போயிருந்தது. பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என இருளர் இன மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியதோடு, அதிகாரப்பூர்வமாக அரசாணையும் பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு, பாம்புக்கடி விஷமுறிவு மருந்துக்கான பாம்புகளை மட்டும் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழ்நாடு அரசு, விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை வகை பாம்புகள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








