பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் உள்ளதால் தவித்து வருகின்றனர் இருளர் பழங்குடியின மக்கள்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் இருளர் பழங்குடியின மக்கள் ஒரு சில இடங்களில் அரசு அதிகாரிகளின் கவனம் பெற்று, அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெற்றாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலில்தான் வாழ்கிறார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருப்பாலைவனம் ஊராட்சியில் உள்ள செஞ்சி அம்மன்நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள், சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.
மேலும் கவனத்திற்கு வரும் பிரச்னைகளை உடனடியாக கண்காணித்து உதவி வரும் அரசு, தங்களுக்கும் பட்டா வீடு கொடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.








