தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் தலைமை செயலகத்தில் முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற அவர், ரூ.4000 கொரோனா நிவாரண நிதி உட்பட ஐந்து கோப்புகளில் கையெழுத் திட்டார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த தலைமை செயலாளராக அவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்து வரும் இறையன்பு ஐஏஎஸ். சுற்றுலாத்துறை செயலாளராகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனராக இருந்து வந்தார். புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப் பட்டதை அடுத்து, தற்போதைய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன இயக்குனநராக மாற்றப்பட்டுள்ளார்.







