சென்னை வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் தலைமை செயலகத்தில் முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற அவர், ரூ.4000 கொரோனா நிவாரண நிதி உட்பட ஐந்து கோப்புகளில் கையெழுத் திட்டார்.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.







