19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கில் அதிரடி துவக்கம் கொடுத்தார். ஆனால் மறுபுறம் நின்ற சாய் சுதர்சன் 6(5) ரன்களில் அவுட்டானார். இறுதியில் 15.5 ஓவர்களில் குஜராத் அணி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







