திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஜன்னத் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அங்கு வந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், மருத்துவருக்கு சீருடை கிடையாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உண்மையிலேயே தாங்கள் மருத்துவர் தானா என்று வினவிய அவர், தனது செல்போன் மூலம் பெண் மருத்துவரை வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல எனக்கூறிய பெண் மருத்துவர், பதிலுக்கு பாஜக பிரமுகரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இருதரப்பினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் புவனேஸ்வர் ராம் மீது 4 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அவரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.