திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், விஐபி தரிசனங்களை முறைபடுத்த வேண்டும், காவல்துறை பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில் அதுதொடர்பான விசாரணை, நீதிபதி பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில், சேவை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது பொது நலன் வழக்காக விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்’
அதற்கு அரசுத் தரப்பில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவை அனைத்தும் பொது மக்கள் நலன் சார்ந்தது என்பதால் பொதுநல வழக்காக விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








