தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பி.எப் என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222ம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
https://twitter.com/OfficeOfOPS/status/1503984814961020931
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015-16 ம் ஆண்டில் 8.8 விழுக்காடாக இருந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்வட்டி விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு மத்திய நிதிஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் என்பதால், 5 கோடியே 40 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தை மாநில அரசு அளித்திட வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.







