பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்தனர். இதனையடுத்து இப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலைக்கு பழங்கள், இனிப்புகள் என சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினார்கள்.
இவர்களுக்கு கிழக்கு பகுதி இளைஞர்கள் பேரவை சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை இனிப்புகளாக பரிமாறிக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







