உதகை அருகே 4 புலிக்குட்டிகள் உயிரிழப்பு: தாய் புலியை தேடும் பணி தீவிரம்!

உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் வனப்பகுதியில் மூன்று புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட மற்றொரு புலி குட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சீகூர்…

உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் வனப்பகுதியில் மூன்று புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட மற்றொரு புலி குட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட சின்ன குன்னூர் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் நான்கு புலி குட்டிகளுடன் தாய்ப்புலி நடமாட்டம் காணப்பட்டு வந்தது. இதனை வனத்துறையினர் அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு மாதங்களான ஒரு புலி குட்டி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மற்ற புலி குட்டிகள் மற்றும் தாய் உயிருடன் உள்ளதா என்பது குறித்தும், புலி குட்டியின் உயிரிழப்பை கண்டறியவும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பெயரில், மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல இணை இயக்குனர் அருண் ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் புலிகளை தேடும் பணியில் இன்று வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரண்டு புலி குட்டிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது, அப்போது அதன் அருகே உயிருடன் இருந்த மற்றொரு புலி குட்டியை வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அதுவும் நீர்ச்சத்து குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஆறு புலி குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளது இயற்கை மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நான்கு குட்டிகளும் உயிரிழந்த நிலையில் தாய் புலியும் இறந்திருக்குமோ என்ற கோணத்தில் வனத்துறையினர் தாய் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.