ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்!

ஹோர்மூஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் உலகின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை மூடியது. மேலும் நீரிணையை கடக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற ஓமன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளர். இதற்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த எம்.டி. அல் பஹியா மற்றும் எம்.டி. மொம்பாசா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இவ்விரு கப்பல்களிலும் இருந்த 46 மாலுமிகளில், 30 பேர் இந்திய மாலுமிகள் ஆவர். எம்.டி. அல் பஹியா கப்பலில் இருந்த 12 இந்தியர்களில், ஒருவர் துயரமான முறையில் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார். எம்.டி. மொம்பாசா கப்பலில் இருந்த 18 இந்தியர்களில், 9 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விழைகிறோம்.

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதரிடம் இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களையும் வன்முறைச் செயல்களையும், ஹோர்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருப்பதும், பகைமை தீவிரமடைந்திருப்பதும் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதோடு, அங்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் நலன்களுக்காக வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.