ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் சிபிஐ விசாரணைக்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவதாக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் இந்த கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் சிபிஐ விசாரணைக்கு எதிரான மனுவை தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசு திரும்ப பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.