இந்தியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்றாக, நடப்பு 2026-27 நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்த தரவுகளின்படி, நிகர நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட 16.40% அதிகரித்து, 6 லட்சத்து 51 ஆயிரத்து 189 கோடி ரூபாயைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, “நாட்டின் வரி வருவாய் முந்தைய நிதியாண்டை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. மொத்த வரி வசூல் (Gross Collection) நடப்பு நிதியாண்டு ஜூலை 13 வரை மொத்த நேரடி வரி வசூல் 16.11% என்ற ஆரோக்கியமான வளர்ச்சியுடன் ரூ. 7,73,681.68 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டு (FY 2025-26), இதே காலகட்டத்தில் மொத்த வரி வசூல் 6,66,337.20 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகர வரி வசூல் (Net Collection) மற்றும் முக்கியப் பிரிவுகள்:
வழங்கப்பட்ட Refund தொகைகள் போக, அரசின் கைவசமுள்ள நிகர வரி வசூல் 16.40% என்ற அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிகர கார்ப்பரேட் வரி வசூல் கடந்த ஆண்டின் 1,96,905.48 கோடியிலிருந்து, தற்பொழுது அது 2,40,241.64 கோடியாக உயர்ந்துள்ளது.
கார்ப்பரேட் அல்லாத தனிநபர் வருமான நிகர வரி வசூல் 3,84,521.23 கோடியாக அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தை முதலீடுகள் மூலமான எஸ்.டி.டி வரி வசூல் கடந்த ஆண்டின் 17,875.88 கோடியிலிருந்து, தற்பொழுது அது 26,428.96 கோடியாகக் கணிசமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் பங்குச்சந்தை வர்த்தகம் மிகத் தீவிரமாக உள்ளதைக் காட்டுகிறது. வேகமாக வழங்கப்பட்ட ரீஃபண்ட்ஸ் மறுபுறம், வரி செலுத்துவோருக்கான ரீஃபண்ட் தொகையை விடுவிப்பதிலும் வருமான வரித்துறை மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில் ஜூலை 13 வரை, கடந்த ஆண்டை விட 14.57% கூடுதலாக, மொத்தம் 1,22,491.87 கோடி வரி செலுத்துவோருக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 1,06,912.48 கோடி மட்டுமே ரீஃபண்ட் வழங்கப்பட்டிருந்தது.




