விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி கிளையில் ரூ.44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர்
இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று காலை
வழக்கமாக வங்கி பணிக்கு வந்தவர் திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு
வங்கி அருகே விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வங்கியிலிருந்து வெளியே செல்லும் போது, வங்கியிலிருந்த 43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தை எடுத்து சென்றுள்ளார்.
வங்கி அதிகாரிகள் காசாளருக்கு பல முறை தொடர்பு கொண்ட போதும் எடுக்காத நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட் ஆப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை சிலர் பணம் எடுத்து வர சொல்லி வங்கி காசாளர்களை
நோட்டமிட்டு தன்னை கடத்தியதாகவும் தனது சம்பள தொகையிலிருந்து சகோதரிக்கு பிரசவ செலவிற்கு பணம் அனுப்பியுள்ளதாக உறவினர்களுக்கு ஆடியோவை காசாளர் அனுப்பி வைத்துள்ளார். அதன் பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் காசாளரின் உறவினர்கள் பணத்தை கையாடல் செய்யும் அளவிற்கு
முகேஷ் ஈடுபட்டிருக்க மாட்டார் எனவும் அவரை யாராவது கடத்தி இருக்கலாம்
என்பதால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
—ம. ஶ்ரீ மரகதம்







