தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.
இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. சம பலம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இரு அணிகளும் இன்று இமாச்சல் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மதியம் 2 மணிக்கு களம் காண்கின்றன.
இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாகவே அவர்கள் இருவரும் திகழ்கின்றனர். பேட்டிங்கில் வலுவான அணியாக இந்தியா திகழ்வதால் கேப்டன் ரோகித் தொடக்கத்தில் களமிறங்கி அச்சமின்றி அடித்தாட முடிகிறது.
அதுபோலவே, விராட் கோலி 4 போட்டிகளில் ஒரு சதம் 2 அரைசதங்களுடன் 259 ரன்களை சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 90.24. நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி இருக்கிறார்.
அதேநேரம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருடைய இடமும் சிக்கலாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி அல்லது ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.







