கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 90,000அ பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் இதுவரை 1,66,10,481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,89,544 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற, அவர்களது உறவுகள் ஆக்சிஜனுக்காக கெஞ்சும் காட்சிகள் மனதை உடைக்கிறது. நேற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். மேலும் பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைக்கான உதவிகளை அரசிடம் கேட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆக்சிஜன் தேவைப் பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஸ் புஷன் கூறுகையில் ‘ நாட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 15% மட்மே நோயாளிகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 90 % நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 7,500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது.’ என்று அவர் கூறினார்.
-183 டிகிரி செல்சியஸ், என்ற குளிர்வான வெப்ப நிலையில்தான் ஆக்சிஜனை சேமிக்க வேண்டும். இந்த ஆக்சிஜன் டேங்கர்கள் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கர்கள் பயணிக்கும்போது, 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். விபத்துக்களைத் தடுக்க இரவு நேரங்களில் ஆக்சிஜன் டேங்கர்கள் பணத்திற்கு அனுமதியில்லை. மேலும் ஒரு டேங்கரில் ஆக்சிஜன் நிரப்புவதற்கு 2 மணி நேரம் எடுக்கும். மேலும் இந்த டேங்கர்கள் மற்ற இடங்களுக்குப் பயணிக்கும்போது கூடுதல் நேரம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையை இந்தியா சந்தித்தபோது, மத்திய சுகாதாரத்துறை 162 ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் 33 ஆக்சிஜன் ஆலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. 59 ஆலைகள் ஏப்ரல் இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் மீதி 80 ஆலைகள் மே மாதத்தில் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







