அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
போர்பதற்றத்திற்கு மத்தியில் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியதாக கூறப்படுகிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவானது.
இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரான் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.







