சென்னையில் அதிகரித்துள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, குற்றச்செயல்களை தடுக்க சென்னை காவல்துறை என்ன செய்கிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காவல்துறைக்கு பெரும் சவால்களாக இருப்பது ரவுடிகள் தான். அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களை தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல், நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்குதல், ரவுடிகளின் செயல்பாடுகளை தடுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. ரவுடிகளை சில வகைகளாக காவல்துறை பிரித்து வைத்துள்ளது. பள்ளியில் ரேங்க கார்டு போல ரவுடிகளை பிரித்து வைத்து கண்காணித்து வருகிறது காவல்துறை.
ரவுடிகளை A பிளஸ், A, B,C என ரேங்கிங் போல காவல்துறை பிரித்து வைத்துள்ளது. A பிளஸ் கேட்டகிரி ரவுடிகள் என்பவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். கூலிப்படை வைத்து கொலை சம்பவத்தை அரங்கேற்றுபவர்கள், கூலிப்படை கும்பல் தலைவன், கொலை முயற்சி, ரவுடியாக வலம் வந்து பணம் பறித்தல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை A பிளஸ் ரவுடிகள் என்று காவல்துறையினர் அழைக்கின்றனர். கூலிப்படையில் இருப்பவர்கள், ஒரு கொலை செய்தவர்கள், கொலை முயற்சி வழக்கு, அடிதடி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், மாமூல் வசுலிப்பவர்கள் தான் A பிரிவு ரவுடிகள் என்கின்றனர் காவல்துறையினர்.
“B” வகை ரவுடிகள் அதிக கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் கைதானவர்கள். இவர்களில் ஒருவரை கொடூரமாக தாக்கி கொள்ளையடிப்பவர்கள், வழிப்பறி வழக்குகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் ஆவர். “C “வகை ரவுடிகள் ஒரு சில கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள், அதிக திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகளவு ரவுடிகள் உருவாகி இருப்பது சென்னை காவல்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3674 ரவுடிகள் இருந்தது தெரியவந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3711 ரவுடிகளாக அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறுகிறது.
அதிலும் ஏ- பிளஸ் கேட்டகரி ரவுடிகள் 69 லிருந்து 92ஆக அதிகரித்திருப்பது சென்னை காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் ஏ கேட்டகரியில் 229 ரவுடிகளும், பி கேட்டகரியில் 1481 ரவுடிகளும், சி கேட்டகரியில் 1894 ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக தரம் பிரித்து வைக்கப்பட்டனர்.
தற்போது ஏ கேட்டகரி 276 ரவுடிகள், பி கேட்டகரி 1699 ரவுடிகள், சி கேட்டகரி 1644 ரவுடிகள் என மொத்தம் 3711 ரவுடிகள் அதிகரித்து இருப்பதாக தகவல் காவல்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. Drive against rowdy elements என்ற ஆப்ரேஷன் மூலமாக கடந்த ஆறு மாதத்தில் 130 ரவுடிகளை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஏபிளஸ் கேட்டகரியில் 25 ரவுடிகள் மற்றும் ஏ கேட்டகரியில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில், 710 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகளை காவல்துறையினர் வழங்கி உள்ளனர். 2524 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.







