இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறியுள்ளார்.
இந்திய கடற்படை தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 4 முதல் 6 சீன கடற்படை கப்பல்களும், சில ஆராய்ச்சி கப்பல்களும் உலாவுவதாகவும் தெரிவித்தார். மேலும் சீனாவைச் சேர்ந்த ஏராளமான மீன் பிடி படகுகளும் இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்படுவதாக தெரிவித்த ஹரிகுமார், அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கடற்படை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் கூறினார். இந்திய கடலோர எல்லையை பாதுகாப்பது தங்கள் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
”தற்சார்பு இந்தியா“ என்கிற இலக்கு குறித்து மத்திய அரசு தங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்த கடற்படை தலைமை தளபதி, 2047ம் ஆண்டிற்குள் கடற்படையில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும் என்கிற உறுதியை தாங்கள் மத்திய அரசிடம் அளித்திருப்பதாகவும் கூறினார். உ்ள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது, இந்திய கடற்படை வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வு என்றும் அவர் கூறினார். இந்திய கடற்படையில் 3000 அக்னி வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய அட்மிரல் ஹரிக்குமார், அவர்களில் 341 பேர் பெண்கள் என கூறினார்.







