ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசுத் தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆண்டுதோறும் விருந்து உபரிசப்பு அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும், ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கான அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாமல் இருந்தது. மேலும் கடந்த ஆண்டு அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று அச்சிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு, தமிழக ஆளுநர் என்று அச்சிடப்பட்டு இருந்தது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் திருவிழா தேநீர் விருந்திலும், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கவில்லை.
அதிமுக மற்றும் பாஜகவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று குறிப்பிட்டு பேசினார். அத்துடன் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறாதது ஏன் என்பது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
இந்நிலையில், குடியரசுத் தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெற்றுள்ளது. மேலும் திருவள்ளுவர் ஆண்டும் அச்சிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் ’தமிழ்நாடு’ என்றும் ஆளுநரின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.