புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை அவமானப்படுத்தி அவரது காரை சேதப்படுத்திய 5 நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சி தலைவர் சுப்ரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்து வரும் நிலையில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அப்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்ற வேண்டுமென ஒரு தரப்பினர் கூச்சலிட்டனர். இதனால் அமளி ஏற்பட்டதால், முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து தினேஷ் குண்டுராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பு நிர்வாகிகள், அவர் வெளியில் வந்தபோது அவருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். மேலும் அவர் புறப்பட்ட காரின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் பரப்பரப்பாக மாறியது.
இந்நிலையில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை அவமானப்படுத்தி அவரது காரை சேதப்படுத்திய 5 நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கட்சியின் மாநில தலைவர் சுப்ரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு அனுப்பிய நோட்டீசில் கூறியிருப்பதாவது, இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ‘அரசியல் விவகார குழு’ கூட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதுச்சேரி பொறுப்பாளர், தினேஷ் குண்டு ராவ் வந்திருந்தார். அப்போது அவரது தலைமையில் நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் உள்ளே புகுந்து தகராறு செய்து கூட்டத்தை நிறுத்திவிட்டு உடனே வந்து எங்களிடம் பேசுங்கள் என்று அநாகரிமாக கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டீர்கள்.
மேலும் இக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, மெயின் ஸ்விட்சை மூன்று முறை ஆஃப் செய்து மின் இணைப்பை துண்டித்து எங்களது கூட்டத்தை நிறுத்த முயற்சி செய்தீர்கள்.
தினேஷ் குண்டு ராவ் தங்களை உள்ளே வந்து அமர்ந்து தங்களது குறைகளை சொல்லுங்கள் என்று பலமுறை சொல்லிய போதும் கேட்காமல், அவரை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்து, சாலையிலே பத்திரிக்கையாளர்கள் சமூக ஊடக புகைப்படக்காரர்கள் முன்னிலையில் நிற்க வைத்து, தாங்கள் அவருக்கு எதிர்ப்பாக, எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முன்னறிவிப்பின்றி அவரை எதிர்த்து கோஷம் போட்டு, தள்ளிவிட்டு, அவமானப்படுத்தி, அவர் காரில் ஏற சென்றதை தடுத்து, அவர் காரில் ஏறிய பிறகும் கார் கண்ணாடி, கதவுகள், டயர்கள் போன்றவற்றை சேதப்படுத்தி, மண்ணை வாரி கார் மீது அடித்து,காரை போகவிடாமல் தடுத்து, தாங்கள் நடந்து கொண்ட விதம், காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் விரோதமானது என்று தெரிந்தே தாங்கள், செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் திட்டமிட்டு கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களையும் கூட்டமாக அழைத்து வந்து இவ்வாறு செய்தது கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயலாகும் என்றும் எனவே தாங்கள், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல், தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள். தங்களை, ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்பதற்கான பதிலை, இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என நோட்டீஸில் கூறியுள்ளார்.







