புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே நீடித்து வந்த அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே நீடித்து வந்த அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கடந்த மே 7 ஆம் தேதி முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக அமைச்சரவை பங்கீட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்ததால் பதவியேற்பதில் சிக்கல் நிலவியது. இதனையடுத்து பாஜக மேலிட தலைவர்கள் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாஜக கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ். இடையே அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமன்ற சபாநாயகர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இரண்டு மூன்று நாட்களில் அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்வர் எனவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.