நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்

நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க…

நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், கழிவறைச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி, தலைமையாசிரியை பெர்சீஸ் ஞானசெல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தாளாளர் செல்வகுமார், ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெய்கணேஷ் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 31-ஆம் தேதி வரை நிதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இருவரும் ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை பெர்சீஸ் ஞானசெல்வி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெய்கணேஷ், அவரையும் வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். சிகிச்சைக்குப் பின்னர், நெல்லை கொக்கிரக்குளம் கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.